பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

தமிழ் மீடியம் தமிழ் மொழி பத்துப்பாட்டு நூல்கள் யாவை?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #110
    சந்தோஷ்
    Keymaster
    @san

    கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் சங்க காலம் எனப்படும். இந்த காலக் கட்டத்தில் வாழ்ந்த புலவர்கள் சங்கப்புலவர்கள் எனவும் அவர்கள் இயற்றிய பாடல்கள் சங்கப்பாடல்கள் எனவும் அழைக்கபடுகின்றது.

    அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வீரம், போர், அறம், வணிகம் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த சங்க இலக்கியங்கள் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகின்றன.

    இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவரை சங்க இலக்கியங்கள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டது.

    இந்த ஆயிரக்கணக்கான பாடல்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் புலவர்கள் ஒன்று கூடி இந்த பாடல்களை இரண்டு வகையாகப் பிரித்தார்கள்.

    1. பதினெண்மேற்கணக்கு நூல்கல்கள்
    2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கல்கள்

    பதினெண்மேற்கணக்கு நூல்கள் மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகை மேலும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டு.

    எட்டுத்தொகை நூல்களைப் பற்றி நாம் வேறொரு கட்டுரையில் பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    1. குறிஞ்சிப்பாட்டு

    குறிஞ்சிப்பாட்டு 261 பாடல் அடிகளைக் கொண்டது. பிரகத்தன் என்ற ஒரு ஆரிய அரசனுக்கு தமிழ் மொழியின் பெருமையைப் பற்றிச் சொல்ல கபிலர் இந்த நூலை இயற்றினார்.

    2. பட்டினப்பாலை

    பட்டினப்பாலை 301 பாடல் அடிகளைக் கொண்டது இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் சோழ மன்னன் கரிகாலன். இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

    3. முல்லைப்பாட்டு

    முல்லைபாட்டு 103 பாடல் அடிகளைக் கொண்டது. இந்த நூலில் பாட்டுடைத் தலைவனின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. இந்த நூலின் ஆசிரியர் நப்பூதனார்.

    4. திருமுருகாற்றுப்படை

    திருமுருகாற்றுப்படை 317 பாடல் அடிகளைக் கொண்டது. முருகப்பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்த நூலின் ஆசிரியர் நக்கீரர்.

    5. பொருநராற்றுப்படை

    பொருநராற்றுப்படை 248 பாடல் அடிகளைக் கொண்டது. இதன் பாட்டுடைத் தலைவன் சோழ மன்னன் கரிகாலன். இதன் ஆசிரயர் முடத்தாமக் கண்ணியார்.

    6. சிறுபாணாற்றுப்படை

    சிறுபாணாற்றுப்படை 269 பாடல் அடிகளைக் கொண்டது. நல்லியக்கோடன் என்ற ஒரு மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்த நூலின் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார்.

    7. பெரும்பாணற்றுப்படை

    பெரும்பாணற்றுப்படை 500 பாடல் அடிகளைக் கொண்டது. தொண்டைமான் இளந்திரையன் என்ற ஒரு மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இந்த நூலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

    8. மலைபடுகடாம்

    மலைபடுகடாம் 583 பாடல் அடிகளைக் கொண்டது. நன்னன் சேய் நன்னன் என்ற ஒரு மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூலின் ஆசிரியர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்.

    9. மதுரைக்காஞ்சி

    மதுரைக்காஞ்சி 782 பாடல் அடிகளைக் கொண்டது. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். இந்த நூலின் ஆசிரியர் மாங்குடி மருதனார்.

    10. நெடுநல்வாடை

    நெடுநல்வாடை 188 பாடல் அடிகளைக் கொண்டது. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன். இதன் ஆசிரியர் நக்கீரர்.

    அகப்பொருள் பற்றிய நூல்கள்

    இதில் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை மற்றும் முல்லைபாட்டு ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றிய நூல்கள். அகப்பொருள் என்றால் தமிழ் மக்களின் அக வாழ்கையில் வரும் கற்பு, தலைவன் தலைவி இடையே ஏற்படும் காதல் போன்றவற்றைப் பற்றி கூறும் நூல்கள்.

    புறப்பொருள் பற்றிய நூல்கள்

    திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணற்றுப்படை, மலைபடுகடாம் மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய ஆறு நூல்களும் புறப்பொருள் பற்றிய நூல்களாகும். புறப்பொருள் என்றால் தமிழ் மக்களின் புற வாழ்கையில் வரும் வீரம், அறம், போர் முறைகள் போன்றவற்றைப் பற்றி கூறும் நூல்களாகும்.

    அகப்புறப்பொருள் நூல்

    நெடுநல்வாடை, இந்த நூலில் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் ஆகிய இரண்டுமே கூறப்பட்டுள்ளன.

    இவையே பத்துப்பாட்டு நூல்களாகும்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.